மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு மீது திமுக வழக்கறிஞர் அணியினர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணியினர் புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கின்றனர்.அதில், "நேற்று நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலை நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் பாடல் பாடும் போது, தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும், அவப்பெயர் உருவாக்கும் வகையிலும் மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பாடல் பாடி கனிமொழியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொது மேடையில் பலரின் முன்னிலையில் பாட்டு பாடி உள்ளார்.
இந்த செயலினை மாநாட்டின் விழா ஏற்பாட்டாளர்கள் அ.தி.மு.கவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு இந்த செயலை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர்.
இந்த செயலினால் கழகத் துணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது எனவும், பொதுவெளியில் ஒரு மாநாட்டு மேடையில் பெண்ணை களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பாடல் வரிகளை பலரின் முன்னிலையில் பாடியுள்ளார்கள்.
கூட்டு சதி செய்து அவதூறு பரப்பத்தூண்டி பொதுமேடையில் பாடவைத்த அதிமுகவை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க வழக்கறிஞர் அணியினர் இளமகிழன் தலைமையிலான தி.மு.க-வினர் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதேபோல் தி.மு.க மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.