அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம்: வி.கே.சசிகலா மேல்முறையீட்டு மனு ஆக.30ம் தேதி விசாரணை

சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி, அவரது வழக்கை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதிகள் ஆர். சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆகஸ்ட் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com