நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டே நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார் கொடுத்துவிட்டு, பிறகு வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சீமான் மீது புகார் கொடுத்ததில் இருந்து செய்தியாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் போலீஸ் பாதுகாப்புடன் தான் வெளியில் வந்துள்ளேன். மருத்துவ பரிசோதனைக்கும் சரி, நீதிமன்றத்தில் ஆஜரான சென்ற போதும் சரி போலீஸ் பாதுகாப்புடன் தான் வந்தேன்.
வீரலட்சுமிக்கு தெரிந்த ஒரு இடத்தில்தான் நான் கடந்த 2 வாரங்களாக வசித்து வந்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை அவர்கள் வேறு திசையிலும், நான் வேறு திசையிலும் பயணிப்பது போல் தோன்றுகிறது. நேற்று கூட செய்தியாளர்களிடம் பேசியுள்ளார், எதுவாக இருந்தாலும் எனக்கும் சொல்லுங்கள் என்று சொன்னேன். ஏனென்றால் இந்த விவகாரம் வேறு திசையில் பயணிப்பது போல் தோன்றுகிறது. அதுமட்டுமல்லாது நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து நேற்று இரவு என்னை வெளியே போக சொன்னார்கள். பிறகு காவல்துறை பேசி என்னை அங்கு இருக்க வைத்தார்கள்.
சாப்பாடு கொடுக்காமல் நிறுத்திவிட்டார் வீரலட்சுமி, இந்த குறுகிய நாட்களில் நிறைய துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளேன். அதனால் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொள்கிறேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என் சுயமுடிவு தான் இது. வாபஸ் வாங்கிவிட்டு நான் பெங்களூரு செல்கிறேன். இதற்கு மேல் இதனை நான் மேற்கொண்டு எடுத்து செல்லும் மனநிலைமையில் இல்லை. வருங்காலத்தில் இந்த புகாரை மீண்டும் கையிலெடுக்கும் எண்ணமும் இல்லை.
நான் எதிர்பார்த்து வந்தது வேறு ஆனால் இங்கு நடப்பது வேறு. புகார் செய்தது நான், ஆனால் என்னை தான் மிகவும் மோசமாக சித்தரித்து பேசியிருக்கிறார்கள். சீமானை எதிர்கொள்ளும் அளவிற்கு எனக்கு மனதளவிலும், உடலளவிலும் பலம் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த விவகாரத்தால் என்னை நானே துன்புறுத்தி கொள்கிறேன் என்பது மட்டும் புரிந்துள்ளது.
சீமான் பேசுவது ரொம்பவே என்னை காயப்படுத்துகிறது. இது வேண்டாம், என்னால் முடியவில்லை. அவர்தான் சொல்கிறாரே 20 சம்மன் அனுப்பினாலும் என்னை ஒன்னும் செய்ய இயலாது என்று. நான் சொல்கிறேன, சீமான் சூப்பர் அவருக்குதான் முழு அதிகாரமும் இருக்கிறது தமிழ்நாட்டில். அவர் முன்பு யாரும் எதுவும் செய்ய இயலாது, தோல்வியை நான் ஒப்புகொண்டு விலகி கொள்கிறேன். சீமான் நல்லா இருக்கட்டும், நான் புகாரை வாபஸ் பெற்று கொள்கிறேன்" என்று கூறினார்.