நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டே நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார் கொடுத்துவிட்டு, பிறகு வாபஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை சீமான் முற்றிலுமாக மறுத்தார். அரசியல் காரணங்களுக்காக தம்மை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பவே, தேர்தல் நேரங்களில் சரியாக இதுபோல் பிரச்னையை கிளப்பி வருகிறார்கள் என்று சீமான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.
அதனை தொடர்ந்து போலீஸார் நடிகை விஜயலட்சுமியிடன் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அது மட்டுமல்லாது திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி விளக்கம் கொடுத்தார். அவரிடம் இருந்து நீதிபதி வாக்குமூலத்தை பெற்று கொண்டார். அந்த சமயத்தில் சீமான் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அது தொடர்பாக எந்த சம்மனும் எனக்கு அனுப்பவில்லை என்று சீமான் உடனுக்குடன் பதில் தெரிவித்தார்.
இந்நிலையில் சீமான் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்யவைத்தார் என்ற புகாரையும் விஜயலட்சுமி போலீஸாரிடம் சொல்லியிருந்த நிலையில், இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜயலட்சுமி அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புகாரின் உண்மைத்தன்மையை அறிவதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.