நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாகவும் பலமுறை தனக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனையையும் நடத்தப்பட்டது.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை சீமான் முற்றிலுமாக மறுத்தார். அரசியல் காரணங்களுக்காக தம்மை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பவே, தேர்தல் நேரங்களில் சரியாக இதுபோல் பிரச்னையை கிளப்பி வருகிறார்கள் என்று சீமான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஆஜராக கூறி சீமானுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் இன்று ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக இன்று ஆஜராக இயலாது அதனால் வருகின்ற 12ம் தேதி ஆஜராவதாக சீமான் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.