நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு சம்மன் அனுப்பினர். இதனை தொடர்ந்து செப்டம்பர் 12ம் தேதி ஆஜராவார் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். இதையடுத்து காவல் நிலையம் அமைந்துள்ள ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் சீமான் இன்று காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜராகவில்லை அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆறுபேர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பின்னர் வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "சில பல காரணங்கள் காரணமாக எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை. இது தொடர்பாக சீமான் கொடுத்த 2 விளக்க கடிதம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து உள்ளோம், நடிகை விஜயலட்சுமி 2011ல் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறியதையடுத்து இந்த வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா என்றும் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாரக உள்ளார்" என்று கூறினார்.