விஷாலின் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்துக்கு தடை நீங்கியது!

நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள "மார்க் ஆண்டனி" திரைப்படத்தை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டது.
நடிகர் விஷால்
நடிகர் விஷால்

விஷாலின் "மார்க் ஆண்டனி" திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி 15 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதால் விஷாலின் புதிய படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில், எந்த படத்தையும் விஷால் நிறுவனம் தயாரித்து வெளியிடவில்லை. "மார்க் ஆண்டனி" படம் சொந்த தயாரிப்பும் இல்லை. படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக மட்டுமே நடித்துள்ளார். அதனால் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்.

மார்க் ஆண்டனி திரைப்படம்
மார்க் ஆண்டனி திரைப்படம்

மத்தியஸ்தரை நியமித்து வழக்கை முடித்து வைக்க வேண்டும். பைனான்சியர் அன்புச்செழியனிடம், திரைப்படத்தில் நடித்து கடனை அடைத்து விடுவதாக மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது. லைகா நிறுவனம் அதை கடனாக மாற்றி திரைப்படத்தை வெளியிட தடை கோருவது ஒப்பந்தத்துக்கு எதிரானது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பணத்தை கடனாக பெற்று விட்டு தொடர்ந்து படத்தில் நடித்துக் கொண்டே இருப்பீர்கள். அதற்கான சம்பளத்தையும் வாங்கி விடுவீர்கள். ஆனால் கடனை அடைக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால்

மேலும், லைகா நிறுவனத்தின் கடனை திரும்ப அடைப்பதாக புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது, அன்புச்செழியனிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தையே கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறீர்கள். விஷால் தரப்பில் கடனை திரும்ப கொடுப்பதற்காக எந்த உத்திரவாதத்தையும் அளிப்பதில்லை.

வழக்கில் விஷாலின் அனைத்து அசையும், அசையா சொத்துக்களை இணைக்க வேண்டும். எப்படி கடனை திரும்ப அடைக்க போகிறீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஏற்கனவே, 6 கோடி ரூபாய் கடன் லைகா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது என்பதால், மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com