நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை இன்று நேரில் பார்த்த கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் ’எப்படி இருந்த தலைவர்..இப்போ இப்படி இருக்காறே’ என்று கண்ணீர் வடித்தனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து தீவிர அரசியல் பணிகளில் இறங்கினார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக எம்.எல்.ஏவாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அந்த காலக்கட்டத்தில் தேமுதிக தமிழ்நாடு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று இருந்தது.
அப்போது, சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வில் விஜயகாந்த் நாக்கை கடித்துக்கொண்டு ஆவேசமாக ஆளுங்கட்சியினரை பார்த்து பேசியது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே விஜயகாந்த் சட்டமன்றத்தில் பேசியது, பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது, அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசியது எல்லாம் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.
2016ஆம் ஆண்டு தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. பிறகு விஜயகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார்.
பின்னர் சற்று உடல்நலம் தேறினாலும், பொதுவெளிகளில் விஜயகாந்த் தலைக்காட்டாமல் இருந்தார். இதனிடையே விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரவ, குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ வெளியிடப்பட்டது.
கொரோனா காலத்திற்கு பின்னர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் கடந்த ஆண்டு தொண்டர்கள், ரசிகர்கள் முன்பு தோன்றி கையசைத்து பேசினார். அவரின் நிலையை கண்டு பல தொண்டர்கள் கண் கலங்கினர்.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் இன்று ரசிகர்கள் முன்பு தோன்றி கையசைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தன்னால் கையைக்கூட அசைக்க முடியாத நிலையில், இருந்தாலும் பிறந்தநாள் அன்று ரசிகர்களை பார்க்க வந்தது தொண்டர்கள் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதேவேளையில் விஜயகாந்திற்கு சரியான ஓய்வு தேவை என்றும் ’எப்படி இருந்த மனுஷன.. இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றும் பலர் வேதனைப்பட்டனர்.
விஜயகாந்த் பிறந்தநாளாக இன்று எப்போதும் போல சுட சுட அறுசுவை உணவும், சிக்கனும் வழங்கப்பட்டது. நீண்ட தொலைவில் இருந்து வந்த தனது தொண்டர்கள் பசியோடு செல்லக்கூடாது என்ற எண்ணத்தில் விஜயகாந்த் இதை செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். விஜயகாந்தின் பல நல்ல செயல்கள் பேசப்படாமல் இருந்தாலும் அவரின் நக்கலான பேசுக்கள் Thug Life வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்