தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரக்கோணம் தனம் பச்சையப்பன் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி லக்ஷயா ஸ்ரீ தமிழில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். மேலும் மாணவி 600க்கு 595 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி லக்சயா ஸ்ரீ-யின் வீட்டுக்கு பிரபல நடிகர் தாடி பாலாஜி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, மாணவிக்கு பரிசு வழங்கினார்.
இதன் பின்னர் நடிகர் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘இந்தி ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த நிலையிலும் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தது பாராட்டுக்கு உரியது.
மாணவியின் பக்கத்தில் நிற்பதும், பாராட்டுவதும் எனக்கு பெருமையாக உள்ளது. உங்களது பெயரிலேயே லக்ஷயா ஸ்ரீ என்றுள்ளது. உங்கள் லட்சியம் நிறைவேறும். என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு நிச்சயம் செய்வேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித் துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கல்விக்காக நிறைய திட்டங்களை கொண்டு வருகின்றனர். அதை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உள்ளனர்.
ஒரு அண்ணன், தம்பியாக உங்களை நான் பாராட்ட வந்துள்ளேன். அக்கவுண்டன்ட் ஆக படிக்க விரும்புவதாக தெரிவிக்கும் லக்ஷயா ஸ்ரீ-க்கு நிச்சயம் உதவி செய்வேன்.
நிச்சயம் அரசியலுக்கு விரைவில் வருவேன். வந்தால் நல்லது செய்வேன். நான் அரசியலுக்கு வருவது குறித்து கூடிய விரைவில் செய்தி வரும். எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் இருப்பேன்’ எனக் கூறினார்.