நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் வீரலட்சுமி ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து வந்து புகார் மனு அளித்தனர்.
அதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் மற்றும் பொது தளங்களிலும் பொய்யான தகவல்களை பரப்பி, பொய்யான மனுக்களை அளித்து கொண்டு நாம் தமிழர் பெற்று இருக்கிற நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வரும் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் வீரலட்சுமி மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், விஜயலட்சுமி சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள், திரைத்துறையில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம் கொண்டவர் என்று கூறி அதற்கான ஆதாரங்கள் என சில புகைப்படங்களை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.
பின்னர் பேட்டி அளித்த மாநில ஒருங்கிணைப்பாளர் மணி.செந்தில், 2011ம் ஆண்டு இது போன்ற புகார் கொடுத்துவிட்டு பின்னர் வாபஸ் பெற்ற விஜயலட்சுமியின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு வீரலட்சுமி என்பவர் துணை போகிறார் என குற்றம்சாட்டினார். இந்த இருவரும் சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்றார்.
சமுக வலைதளங்களில் சீமானின் தாயார் மற்றும் எங்கள் இயக்க பெண்கள் மீது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். இன்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த புகாரை அடிப்படையாக வைத்து விஜயலட்சுமி வீரலட்சுமி மீது தனி, தனி மனு போட உள்ளோம் என்றார்.