ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் வக்ஃபு வாரிய கண்காணிப்பாளராக பணியில் இருந்து வருபவர் ஆயிஷா. இதே வக்ஃபு வாரியத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தவர் அபுல் அசன்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் நிர்வாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட கண்காணிப்பாளர் ஆயிஷா, அலுவலக உதவியாளர் அபுல் அசன் மூலம் லஞ்சம் பெற்றதாக சென்னை வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரிடம் செஞ்சை ஜமாத் கமிட்டியினர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்படி சென்னை வக்ஃபு வாரிய உதவி செயல் அலுவலர் வஷீர் அகமது தலைமையில் செஞ்சை ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் தேர்தல் நடத்துவதற்காக ஒரு தரப்பினரிடம் கண்காணிப்பாளர் ஆயிஷா லஞ்சம் வாங்கியது உறுதியானதைத் தொடர்ந்து அலுவலக உதவியாளர் அபுல் அசனை பணியிடை நீக்கம் செய்தும், கண்காணிப்பாளர் ஆயிஷாவிற்கு குற்றச்சாட்டு குறிப்பாணை (சார்ஜ் மெமொ) வழங்கியும், சென்னை வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் ஜெயினுலாபுதீன் நடவடிக்கை மேற்கொண்டார்.
முஸ்லிம் பள்ளிவாசலில் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது தொடர்பாக வக்ஃபு வாரிய அலுவலர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவம் இஸ்லாமியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நைனா முகம்மது