கடலூர்: உணவு டெலிவரி பெட்டியில் பதுக்கி கஞ்சா விற்பனை - இளைஞர் சிக்கியது எப்படி?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உணவு டெலிவரி பெட்டியில் பதுக்கி, கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பத்மநாதன்
பத்மநாதன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் பத்மநாதன் (25).

சிதம்பரத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

வழக்கம்போல் பத்மநாதன் இன்று காட்டுமன்னார்கோயில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்து வந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பரந்தாமன் வாகனத்தில் வைத்திருந்த உணவு டெலிவரி பெட்டியை சோதனை செய்தனர்.

அப்போது பரந்தாமன் உணவு பார்சலுடன் பதுக்கி கஞ்சா விற்பனை செய்வது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த சுமார் 10 கஞ்சா பொட்டலம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்கு பத்மநாதனை அழைத்து வந்து காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து பத்மநாதன் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக உணவு டெலிவரி செய்யும் வாகனத்தில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பத்மநாதனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com