பூவிருந்தவல்லியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை இளம்பெண் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதுரா (23). இவர் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து வெளியே வந்த போது சாலையில் 4 பவுன் தங்கச் சங்கிலி கேட்பாரற்று கிடந்துள்ளது. அதைக் கண்ட ஸ்ரீமதுரா அந்த தங்கச் சங்கிலியை எடுத்து பூவிருந்தவல்லி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் காவல்துறையினர் விசாரித்ததில் தங்கச் சங்கிலி குமணன் சாவடி பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்குச் சொந்தமானது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் தங்கச் சங்கிலியைத் தவற விட்டார் என்பதும் தெரியவந்தது. பின்னர் பாரதியைக் காவல்நிலையம் அழைத்த காவல்துறையினர் தவற விட்ட நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அவரிடம் ஒப்படைத்தனர்.
சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளம்பெண்ணை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.