காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பெண்கள் நீரில் முழ்கி மாயமானார். ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை, மல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் அபிராமி(22), இவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த மீரா(23), கீர்த்திகா(20), பாலா(28), ஹரிஹரன்(25), சந்தோஷ்(22) ஆகிய ஆறு பேரும் வீட்டில் மின்சாரமில்லாததால், அருகிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது, அவர்களில் அபிராமி மற்றும் மீரா ஆகிய இரண்டு பேரும் ஆழமானப் பகுதிக்குச் சென்றதால், அவர்கள் இரண்டு பேரும் நீரில் முழ்கினர். இதனையறிந்த அவருடன் வந்த பாலா, அவர்கள் இரண்டு பேரையும் காப்பாற்ற முயன்ற போது, அவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதனையறிந்த கரையிலிருந்தவர்கள், பாலாவை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அருகிலுள்ளவர்கள், சுவாமிமலை போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
நீண்டநேர தேடுதலுக்கு பிறகு அபிராமியின் உடலை மீட்டனர். மேலும், மாயமான மற்றொரு பெண்ணான மீராவைத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாகச் சுவாமிமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மீராவுக்கு அண்மையில் நிச்சயம் முடிந்துள்ள நிலையில் 15 நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.