விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள ஜோகில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மூர்த்தியம்மாள். தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி (33).
கடலூரில் படிப்பை முடித்த முத்தமிழ்ச்செல்வி திருமணத்துக்கு பிறகு சென்னையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
மேலும் தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும், ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்ச்செல்வி 2021ம் ஆண்டு 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கயிறு மூலம் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 58 விநாடிகளில் இறங்கி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலையில் 165 அடி உயரத்தில் இருந்து கண்களை துணியால் கட்டிக்கொண்டு கயிறு மூலம் 55 விநாடிகளில் இறங்கி சாதனை புரிந்தார்.
இதையடுத்து உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை கடந்த ஏப்ரல் 5ம் தேதி தொடங்கினார். இந்நிலையில் முத்தமிழ்ச்செல்வி 38 நாள்கள் பயணத்தை கடந்து எவரெஸ்ட்டில் 7 ஆயிரத்து 150 மீட்டர் தூரம் ஏறி, சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து தனது அனுபவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் முத்தமிழ்ச்செல்வி பரவ விட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘வீரத்தமிழச்சி முத்தமிழ்ச்செல்வி’ என வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.