கரூர்: விதவையிடம் ரூ.1.82 கோடி மோசடி - சிக்கலில் மந்திரவாதி

கேரளா மாந்திரீகம் செய்வதாக கூறி விதவை உள்பட 3 பேரிடம் ரூ.1.82 கோடி மோசடி செய்ததாக, மந்திரவாதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர்: விதவையிடம் ரூ.1.82 கோடி மோசடி - சிக்கலில் மந்திரவாதி

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியாண்டவர் கோயில் வீதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. கணவனை இழந்தவர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜான்சிராணி சகோதரர்கள் பொன்னம்பலம், செந்தில் ஆகியோருடன் திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்த மந்திரவாதி சைமனை என்பவரை சந்தித்துள்ளனர்.

பின்னர் தங்களது குடும்பத்தில் தோஷம் இருப்பதாகவும், அந்த தோஷத்தை கழித்து ஆடம்பரமாக வாழ பணம் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இதையடுத்து மந்திரவாதி சைமனும் கேரளா மாந்திரீகம் மூலம் தோஷம் கழிப்பதாக அவர்களிடம் கூறி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பல்வேறு பூஜை செய்து வந்துள்ளார்.

ஆனால் மந்திரவாதி சொன்னதுபோல் எந்த பலனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே 3 பேரிடமும் ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் பணத்தை மந்திரவாதி சைமன் பெற்றிருக்கிறார்.

அவரது மாந்திரீகம் மூலம் எந்த பலனும் இல்லாததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு சைமனிடம் 3 பேரும் கடந்த 3 ஆண்டு காலமாக கேட்டுப்பார்த்தும் பணத்தை சைமன் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ஜான்சிராணி மற்றும் அவரது சகோதரர்கள் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மந்திரவாதி சைமன் மீது புகாரளித்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகாலமாக மாந்திரீகம் செய்வதில் இவர்களுக்குள் பிரச்னையில்லாமல் இருந்த நிலையில் இப்போது ஏன் பிரச்னை வந்தது? என தெரியவில்லை.

அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 82 லட்சம் பணத்தை எந்தெந்த தேதியில் மந்திரவாதி வாங்கினார்? என்பது பற்றி விசாரித்து நிச்சயம் மந்திரவாதி மீது நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு யாரும் ஏமாற வேண்டாம் என பலமுறை வலியுறுத்தியும் இவ்வாறு நடக்கிறது. இனியும் யாரும் ஏமாறக்கூடாது’ என்றனர்.

- அரவிந்த்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com