திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் இருந்து காட்பாடி, திருவலம் குடோனுக்கு 30 டன் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது.
இந்த லாரி ஆர்.கே.பேட்டை அருகே நாகபூண்டி என்ற இடத்தில் வந்தபோது மின்சார வயர் லாரியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக, லாரியில் இருந்த ஓட்டுனர் இறங்கி தப்பிய நிலையில் தீ மளமளவென பரவி லாரி முழுவதும் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வாகனங்களில் விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இதற்கிடையில் லாரியில் இருந்த 30 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு லாரியில் இருந்து வந்த கரும்புகையால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
- திருவள்ளூர் நவீன்