ராமநாதபுரம்: கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை - இரு தரப்பினரிடையே என்ன பிரச்னை?

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட கனகராஜ் மற்றும் உறவினர்கள்
கொலை செய்யப்பட்ட கனகராஜ் மற்றும் உறவினர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (35). கொத்தனார். இவர், திருமணமாகி தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அதேப் பகுதியில் உள்ள மலையான் குடியிருப்பு அருகே கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜீவா நகரைச் சேர்ந்த துரைமுருகன் (28) என்பவர் தனது ஆட்டோவில் இருந்து இறங்கி அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது கனகராஜ், சேகர், குமரேசன், பாண்டி ஆகியோருக்கும், துரைமுருகனுக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் துரைமுருகனை கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த துரைமுருகன் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரச் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே காத்திருந்துள்ளார். அதே சமயம் தகராறு முடிந்துவிட்டதாக எண்ணி கனகராஜ் தனது நண்பர்களை அனுப்பி வைத்துவிட்டு அங்கேயே இருந்துள்ளார். இந்த நிலையில் ஆயுதங்களுடன் வந்த் துரைமுருகனின் நண்பர்கள் கனகராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த எமனேஸ்வரம் காவல்துறையினர் கனகராஜனின் உடலைக் கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைமுருகன் (28), பாலமுருகன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். 7 மாத குழந்தையுடன் உள்ள கனகராஜின் குடும்பத்திற்கு நிதி உதவி மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி அவரது உறவினர்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த பரமக்குடி டி.எஸ்.பி காந்தி தலைமையிலான காவல்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் மோதல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- சுரேகா எழில்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com