சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் நெமிலிச்சேரி செல்லும் இரண்டு ரயில் பாதைகள் உள்ளன. இன்று எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்தது.
குறிப்பாக போடிநாயக்கனூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரமாக நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நேற்று இரவு போடிநாயக்கனூரில் இருந்து தேனி, உசிலம்பட்டி, கம்பம், திண்டுக்கல், மதுரை, காட்பாடி வழியாக சென்னைக்கு வரக்கூடிய ரயில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 7 மணி 10 மணி வரை திடீரென நிறுத்தப்பட்டது. முதலில் சிக்னல் கோளாறு என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ரயில்வே ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது திருநின்றவூர் ரயில்வே மேம்பாலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் செல்லக்கூடிய ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதாக தெரியவந்ததை அடுத்து திருநின்றவூர் ரயில்வே ஊழியர்கள் வந்து விரிசலை சரி செய்தனர். தற்போது அவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் மெதுவாக அப்பகுதியை கடந்து செல்கிறது.