சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன். சித்த மருத்துவர். இவர், தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சித்த மருத்துவத் தொழிலில் கங்காதரனுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் தூக்க மாத்திரைகளை மனைவி மற்றும் மகளுக்கு வற்புறுத்தி கொடுத்துவிட்டு கங்காதரனும் உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதை சித்த மருத்துவரின் மகள் ஜனப்பிரியா, குறுஞ்செய்தி மூலம் உறவினருக்கு தகவலாக அனுப்பி உள்ளார். இதையறிந்த உறவினர்கள் விரைந்து வந்து மயங்கிக் கிடந்த 3 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதரன் மற்றும் ஜனப்பிரியா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவரின் மனைவி சாருமதியை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060