’போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த போலீசில் தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்’ - ஜி.கே.மணி வலியுறுத்தல்

சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 பெரிய மாவட்டங்களை உடனடியாக பிரித்து அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி
பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி

தமிழகத்தில் பலவித போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செவ்வாய் பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, ”தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு அனைத்து மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவிகளின் விடுதி வரை கஞ்சா, அபின் உள்ளிட்ட பலவிதமான போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. பா.ம.க-வின் உயிர் மூச்சு கொள்கையான மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போதைப் பொருட்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்த காவல்துறையில் தனி பிரிவு ஏற்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பா.ம.க சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என இளைய தலைமுறை போதை பொருட்களால் வீணாகி சமூகத்தை சீரழித்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்பவர்கள் தயாரிப்பவர்களுக்கு சமூக பார்வை வேண்டும். போதைப் பொருட்களை விற்பனை செய்து இளைஞர்களை சீரழிக்க கூடாது. மக்களை அழித்து சம்பாதிக்க கூடாது என்ற விழிப்புணர்வும் அவர்களுக்கு தேவை என்றார்.

மேலும், கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டு வருவதை குறைக்கவே கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசு இழப்பீடாக அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம் வழங்கியிருப்பதாக கூறினார்.

நிர்வாக வசதிக்காக சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், கோவை, மதுரை போன்ற 10 பெரிய மாவட்டங்களை உடனடியாக பிரித்து அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சேலம் மற்றும் தரும்புரி மாவட்டங்களில் நீர் ஆதாரத்தை பெருக்கவும் விவசாய வளர்ச்சிக்காகவும், காவிரி உபரி நீர் திட்டத்தை பா.ம.க வலியுறுத்தி வருவதைப் போல முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேட்டூர் அணையில் இருந்து 538 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com