சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த மலர் விழி. இவரது கணவர் செந்தில்குமார் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இவர்கள் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ளார் அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சுரேஷ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார் அதில், "ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரின் முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியதற்காக தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த முறைகேட்டிற்கு ஊராட்சிமன்ற செயலாளர் சரவணபவன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் குறிஞ்சி பாண்டியன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். தனது உயிருக்கு ஆபத்து நேரிட்டால் இந்த நான்கு பேர் தான் காரணம்" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.