தேனி அருகே உள்ள வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் கமலேஷ்வரன். இவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த கமலேஷ்வரனை அவரது அம்மா வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கமலேஷ்வரனுக்கு சமூக வலைதளம் மூலமாக போடேந்திரபுரத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகள் 12ம் மாணவி அறிமுக ஆகியுள்ளார். கமலேஷ்வரனுக்கும், இவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் சன்னாசியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக இவர் மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கமலேஷ்வரன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதில் கமலேஷ்வரனை கடுமையாகத் தாக்கி தனது மகளிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரித்துச் சென்றுள்ளனர்.
சில நாள்களுக்கு பிறகு மீண்டும் கமலேஷ்வரன் சன்னாசியின் மகளிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இது சன்னாசிக்கு தெரிய வரவே மீண்டும் கமலேஷ்வரனை கடுமையாக எச்சரித்துள்ளார்.
அப்போது தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரபாண்டி கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அங்கு கமலேஷ்வரன், சன்னாசியின் மகளை அழைத்துச் சென்று ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கமலேஷ்வரனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கமலேஷ்வரன் வீட்டை விட்டு விவசாய தோட்டத்திற்குச் செல்வதை அறிந்த சன்னாசி அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கமலேஷ்வரனின் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே சென்ற கமலேஷ்வரன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பயந்துபோன அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தோட்டம் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பழனிசெட்டிப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 'சன்னாசி தான் இந்த கொலையைச் செய்தார் என்றும், சன்னாசியின் மனைவி தமிழ்செல்வி மற்றும் அவருடைய ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கொலைக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
பின்னர் சன்னாசியிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
"கமலேஷ்வரனிடம் பலமுறை தனது மகளிடம் தொடர்பு கொள்ள கூடாது எனக் கூறினேன். அதனையும் மீறி அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். எனது மகளைக் கோவில் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்ததால் ஆத்திரமடைந்து கொலையைச் செய்தேன்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே சன்னாசி கொள்ளை சம்பவம் மற்றும் வழிப்பறி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளியே வந்து கொலையை செய்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.