அரசு நில ஆக்கிரமிப்பு புகாரில் ஆ.ராசா : கோவையில் ஓர் அதிரடி வழக்கு

கோவை மாவட்டத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல திட்டம் ஒன்றை துவக்கி வைத்ததற்காக வழக்கில் சிக்கியுள்ளார் எம்.பி. ஆ.ராசா.
எம்.பி. ஆ.ராசா
எம்.பி. ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் திமுகவின் துணைப் பொதுசெயலாளரான ஆ.ராசா. இந்த தொகுதியில் நீலகிரி மாவட்டம் மட்டுமில்லாது ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை என நான்கு மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளும் வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள கூடலூர் பகுதியில் நிலத்தடி குடிநீர் தொட்டி மற்றும் அதை சுற்றி சுவர் கட்டும் சுமார் 37 லட்சம் மதிப்பிலான பணியை சில மாதங்களுக்கு முன் துவக்கி வைத்தார் ஆ.ராசா.

இதில் தான் விவகாரம் எழுந்துள்ளது, அதாவது தொட்டியும், சுவரும் கட்டப்படும் இடம் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குசவன் குட்டை எனப்படும் இயற்கையான நீர்நிலை தேக்க இடம். இதை ஆக்கிரமித்து தான் கூடலூர் நகராட்சி சார்பில் இந்த கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதைத்தான் எதிர்த்துள்ளார் கோவையை சேர்ந்த அருண்குமார் எனும் சமூக ஆர்வலர்.

அவர் இது தொடர்பாக கோவை ஜே.எம்.5 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் "நீர் நிலையின் ஒரு பகுதியை அழித்து, தண்ணீர் வழிப்பாதையை அடைத்து, பள்ளத்தை சமமாக மாற்றி கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக கோவை ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், கூடலூர் நகராட்சி தலைவர் என சம்பந்தப்பட்ட அத்தனை பேரிடமும் மனு அளித்துவிட்டேன்.

எம்.பி. ஆ.ராசா
எம்.பி. ஆ.ராசா

ஆனால் எந்த பலனுமில்லை, நீர் நிலைகளை காக்க வேண்டியது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடமை. ஆனால் ஆக்கிரமிப்புக்கு அவர்களே துணை போகின்றனர். எனவே எம்.பி., ஆட்சியர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிரடி புகார் மனுவானது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, வழக்கு எண்ணும் பதிவாகிவிட்டது. புகார் தொடுத்திருக்கும் அருண்குமாரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக வரும் 26ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர் தரப்பிடம் இது தொடர்பான விளக்கத்தை நாம் கேட்ட போது "அரசுப்பணியே ஆக்கிரமிப்பு இடத்தில் நடக்குமா? அரசே ஆக்கிரமிப்பு செய்யுமா? எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கும்போது மிக விரிவாகவும், தெளிவாகவும் அதை தாக்கல் செய்வோம்" என்கிறார்கள்.

- ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com