திருச்சி மாநகரத்துக்குள் கோட்டை காவல் நிலைய பகுதியில் திருச்சி கரூர் ரோட்டில் காவல் சோதனை சாவடி எண் 7 அருகில் உள்ள குடமுருட்டி ரயில்வே கேட்டின் கேட் கீப்பர் ராஜசேகர் என்பவர் இரவு 11.30 மணியளவில் தனது ரயில்வே கேட் அருகில் உள்ள கேட் கீப்பர் அறையில் நன்கு மது அருந்திவிட்டு சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தார்.
அந்த சமயம் கோட்டை ரயில்வே நிலையத்தில் இருந்து கரூர் நோக்கி செல்ல இருந்த ரயில் சிக்னல் கிடைக்காததால் கலைஞர் அறிவாலய பகுதியில் நின்று கொண்டிருந்தது. வழக்கமான ஹாரன் அடிக்கப்பட்டு பதில் இல்லை என்பதால் தொடர்ந்து ஹாரன் அடித்து அவசர நிலையை உணர்த்தினார் எஞ்சின் டிரைவர். ஆனாலும் ராஜசேகருக்கு போதை தெளியவில்லை.
வழக்கத்துக்கு மாறான ஹாரண் சத்தத்தை கேட்ட அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாக குடமுருட்டி செக்போஸ்ட் ரயில்வே கேட் அறைக்கு வந்து பார்த்தபோது அந்த ரயில்வே கேட் கீப்பர் முழுபோதையில் இருந்துள்ளார். அவர்கள் ஜன்னல் கதவுகளை உடைத்து இவரை வெளியே அழைத்த போது, இவர் அவர்களை திட்டி அசிங்கமாக பேசி உள்ளார்.
உடனே சம்பவம் அறிந்த காவல் சோதனை சாவடி 7ல் இருந்த தலைமை காவலர் ஆணையப்பன் என்பவரும் கோட்டை காவல் நிலைய ரோந்து வாகன எண் 7 சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலு மற்றும் தலைமை காவலர் மணிகண்டன் ஆகியோர் உடனடியாக துரிதமாக செயல்பட்டு, மதுபோதையில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் ராஜசேகரை கேட்டை உடனடியாக மூட சொல்லி ரயில் செல்ல வழிவகை செய்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மாநகர தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் மற்றும் அவர்களுக்கு தெரிந்த ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். திருச்சி மாநகர தனிப்பிரிவு குற்ற புலனாய்வுதுறை அலுவலகம் மூலம் உடனடியாக ரயில்வே தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் செந்திலுக்கும், காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் (கம்பரசம்பேட்டை) வசிக்கும் கேட் கீப்பர் மேஸ்திரி சோலை ராஜன் என்பவருக்கு மேற்கண்ட உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்ததன் பெயரில் அவர் நள்ளிரவு 12 மணிக்கு அங்கே வந்து குடமுருட்டி ரயில்வே கேட் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இரவில் அந்த வழியாக சென்ற ரயில்கள் எந்த பிரச்னையுமின்றி சென்று வந்தன.
தெளிவாக இருந்து சிக்னல் கொடுத்தாலே விபத்துக்கள் ஏற்படும் நிலையில், சிக்னல் கொடுத்து கேட்டை மூட வேண்டிய ரயில்வே கேட் கீப்பர் மதுபோதையில் படுத்திருந்தது ரயில்வே வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து துறை ரீதியான உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஷானு