புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சமீபத்தில் ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அனைத்து அதிகாரங்களும். ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்களே என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது’ என பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், ‘விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமாருக்கு புதுச்சேரியில் என்ன வேலை?’ என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதை கண்டிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் லோகு ஐயப்பன் தலைமையில் சமூக நல அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் சாலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது புதுச்சேரி மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணமில்லா மருத்துவ சேவையை நிறுத்தியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதேப்போல் அறவழியில் போராட்டம் நடத்திய ‘விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமாருக்கு புதுச்சேரியில் என்ன வேலை?’ என்று கூறிய ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியில் தனக்கு மட்டும்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றது என கூறும் ஆளுநர் ஆளும் அரசின் அமைச்சரவைக்கே தெரியாமல் புதுச்சேரியின் அனைத்து அரசு நிர்வாகத்திலும் நேரடியாகத் தலையிட்டு கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கி அதன் மூலம் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டியும், கண்டித்தும் பேசினர்.
அப்போது திடீரென ‘துணை நிலை ஆளுநரே புதுச்சேரியைவிட்டு வெளியேறு’ ‘ஊழல் ஆளுநரே வெளியேறு’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் போஸ்ட் ஆபீஸ் அருகே தடுப்பு கட்டைகளை அமைத்து போராட்டக்காரர்களை நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆளுநரை கண்டித்தும், ஆளுநரை வெளியேறி கூறியும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.