தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் திடீரென திசையன்விளைக்குச் சென்றார். அவர் அங்கு செல்கிற விஷயம் சீக்ரெட்டாய் வைக்கப்பட்டிருந்தது.
திசையன்விளை நுழைவாயிலில் சட்டென காரை நிறுத்தி வழியில் சென்றவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டிருக்கிறார். அவர்கள் சொன்னபடி காலை 9.30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்றிருக்கிறார். அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை.
மருந்தகத்தை கவனிப்பவர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் வரவில்லை. ஒரே ஒரு நர்ஸ் மட்டும் அங்கிருந்துள்ளார், வருகிற நோயாளிகளுக்கு டாக்டர் பரிந்துரை இல்லாமலேயே மருந்து, மாத்திரைகள் கொடுத்ததோடு ஊசியும் போட்டிருக்கிறார். இதைக் கண்ட அமைச்சருக்கு பயங்கர ஷாக், உடனடியாய் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்துவிட்டு பணிக்கு வராத டாக்டர், ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
ஆரம்ப சுகாதார நிலைய காம்பவுண்டின் ஓரம் ஆம்புலன்ஸ் மற்றும் மருந்து வண்டி நின்றிருக்கிறது. மருந்து வண்டியில் ஏறிய அமைச்சருக்கு பயங்கர டென்சன். நெல்லையில்லிருந்து அங்கு கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள் யாரும் கவனிக்காமல் கேட்பாரற்று கிடந்திருக்கிறது. உடனடியாய் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். பின்னர் நாய்க்கடி, பாம்புக்கடி மருந்துகள் ஸ்டாக் இருப்பதை பொதுமக்களுக்கு தெரியும்படி போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.