தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் இருக்கும் சூரன்குடி கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் மாருதி ஷிப்ட் கார் ஒன்று நேற்று இரவு எரிந்துள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்க முயன்றனர். காரில் ஆண் சடலம் ஒன்று எரிவது அவர்களுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி அங்கே வைத்து சோதனை செய்யப்பட்டது. காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், தீப்பிடித்து எரிந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சூரன்குடி போலீசார் நாகஜோதியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் காரில் வைத்து ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.