கேரளாவில் 70 வழக்குகள்- நெல்லை போலீசில் சிக்கிய வாலிபர்

அணையை ஒட்டி உள்ள காட்டில் மாறு வேடத்தில் பதுங்கியிருந்த பாலமுருகனை போலீஸ் படை பிடித்து கேரள போலீசிடம் ஒப்படைத்தது.
கைது நடவடிக்கை
கைது நடவடிக்கை

நெல்லை மாவட்டம், கடையம் பக்கம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவன் பாலமுருகன் (33 வயது). சின்ன வயதிலேயே அடிதடி, கொலை, கொள்ளைக்கு பெயர் போனவன். இதனாலேயே வீட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறான். பின்னர் கேரளா மாநிலம் கொல்லத்தில் செட்டிலாகியிருக்கிறான். அங்கு அவனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

எனவே, வீடுகளில் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறான். கொல்லம், கோழிக்கோடு, பத்தனம் தட்டா ஆகிய போலீஸ் நிலையங்களில் இவன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 70 வழக்குகள் இருக்கின்றன.

கொல்லத்தில் உள்ள ஒரு கோடீஸ்வரர் வீட்டில் புகுந்த பாலமுருகன் அங்கிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்திருக்கிறான்.இந்த வழக்கில் கொல்லம் போலீசார் அவனை பிடித்திருக்கிறார்கள். நகைகளை எங்கே என்று கேட்டதற்கு திண்டுக்கல்லில் விற்று விட்டேன் என்று சொல்லியிருக்கிறான்.எனவே கொல்லம் போலீசார் நகைகளை மீட்பதற்காக கடந்த 11.7.2023ம் தேதி திண்டுக்கல்லுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்போது வயிற்று வலி வந்தவன் போல் நடித்து கேரள போலீசின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எஸ்கேப்பாகியிருக்கிறான்.

இது குறித்து கேரள போலீஸ் தமிழக காவல்துறையை அலெர்ட் செய்தது.இந்த நிலையில் பாலமுருகன் அவனது சொந்த ஊரான கடையம் பக்கம் ராமநதி அணை இருக்கும் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாய் ஆலங்குளம் டி.எஸ்.பி பர்னபாசுக்கு தகவல் தெரிய வர, அவர் உடனடியாய் போலீஸ் படையுடன் காட்டுக்குள் போய் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார்.

அணையை ஒட்டி உள்ள காட்டில் பதுங்கியிருந்த பாலமுருகனை போலீஸ்படை பிடித்து கேரள போலீசிடம் ஒப்படைத்தது.

இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடையத்தில் தோப்பு வீட்டில் தனியாய் வசித்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதியினரை பாலமுருகன் தாக்கி கொள்ளை அடிக்க முயன்ற போது அவரை எதிர்கொண்டு தாக்கி ஓட ஓட விரட்டியடித்தனர் இந்த முதியோர் தம்பதிகள். தமிழக அரசு இவர்களுக்கு வீரத்தம்பதிகள் என விருது கொடுத்து பாராட்டியது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்” என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com