கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் அதிக அளவில் நகர்ப்புற பகுதிகளில் சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கோயில் தெப்பக்குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.
சில மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்தில் குளித்த மனநலம் பாதிக்கப்பட்டவரை தேடத் தொடங்கினர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தேடுதல் வேட்டையில் இறங்கிய தீயணைப்புத் துறையினர் அவரை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர்? என, காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கோயில் தெப்பக்குளத்தில் குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பொய்யாமொழி, கடலூர்