திமுக ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் - அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

ஒரு குடும்பத்தை பாதுகாத்து பொருளாதாரத்தில் முன்னேற்றி பெருமையுடன் எடுத்துச்செல்வது பெண்கள்தான்
அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஆட்சியாக தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடிஅண்ணாமலை, தேவனந்தல், அய்யம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த ஊராட்சிகளில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றதுடன் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ”தமிழ்நாடு அரசின் சட்ட திட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் பட்டாக்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் ஆண்களை விட பெண்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். பெண்கள் படித்தால் தான் நாட்டில் வளர்ச்சி பெருகும். மனிதர்களுக்கு எவ்வாறு கண்கள் முக்கியமோ அதேபோல் சமுதாயத்திற்கு பெண்கள் முக்கியம்.

ஒரு குடும்பத்தை பாதுகாத்து பொருளாதாரத்தில் முன்னேற்றி பெருமையுடன் எடுத்துச்செல்வது பெண்கள்தான்.பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஆட்சியாக தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com