'பயணிகளை சமாளிக்க முடியாமல் சாலையில் உருண்ட நடத்துனர்' - அரசுப் பேருந்துக்குள் நடந்தது என்ன?

சிலர் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த நடத்துநர் 'என்னை படம் எடுக்காதீங்க' எனக் கூறிவிட்டு போலீசார் முன்னிலையில் கூச்சலிட்டு தரையில் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டார்.
'பயணிகளை சமாளிக்க முடியாமல் சாலையில் உருண்ட நடத்துனர்' - அரசுப் பேருந்துக்குள் நடந்தது என்ன?

நெல்லையில் அரசு பேருந்து நடத்துநர் சாலையில் உருண்டு கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திருப்பூரிலிருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததும் 1to1 எனக் கூறி நாகர்கோவில் செல்லும் பயணிகளை மட்டுமே நடத்துநர் பேருந்தில் ஏற்றியுள்ளார். அப்போது நாங்குநேரிக்கு செல்லும் ஒரு சில பயணிகளும் பேருந்தில் பேருந்தில் ஏறியுள்ளனர். இந்த பேருந்து நாங்குநேரிக்கு போகாது என வழக்கம் போல நடத்துநர் கூறியுள்ளார். அதற்குப் பயணிகள் இது வழக்கமாக நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்லும் பேருந்து தான் எனக்கூறி இறங்க மறுத்துள்ளனர். இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் நாங்குநேரி பயணிகளுக்கும் நடத்துநர் டிக்கெட் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் பெற்ற பயணிகள் இது 1to1 பஸ் தானே? எப்படி இடையில் உள்ள ஊர் பயணிகளை ஏற்றலாம் என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாங்குநேரி பயணிகளுக்கும் நாகர்கோவிலில் சேர்ந்த பயணிகளுக்கும் இடையே பேருந்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் நாங்குநேரி பயணிகளை அவதூறாகப் பேசிய நாகர்கோவில் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பிரச்னை பெரியதானால் பேருந்தை ஓரமாக நிறுத்துவதாகக் கூறிவிட்டு ஓட்டுநர் நாகர்கோவில் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் பைக்கில் பின்னால் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிலர் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த நடத்துநர் 'என்னை படம் எடுக்காதீங்க எனக் கூறிவிட்டு போலீசார் முன்னிலையில் கூச்சலிட்டு தரையில் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அவருக்குத் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். உயர் அதிகாரிகள் அரசு அனுமதி இல்லாத பைபாஸ் ரைடர் 1to1 எனப் பல பெயர்களில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கச் சொல்லி வாய்மொழியாக உத்தரவிடுவதாகவும், பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இவர்களுக்கு இடையில் சிக்கி தினமும் நிம்மதியின்றி பணி செய்வதாகத் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தூக்கி தண்ணீர் கொடுத்துச் சமாதானப்படுத்தினர். பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com