’நாலு வீலையும் உருவிட்டாங்க’- நள்ளிரவில் கார்களுக்கு குறி வைக்கும் திருட்டுக் கும்பல்

'’இரவு ’செகண்ட் ஷோ’ சினிமா பார்த்துவிட்டு மக்கள் எல்லோரும் சென்ற பின்னரே இந்த திருட்டு நடந்திருக்கலாம்’’
’நாலு வீலையும் உருவிட்டாங்க’- நள்ளிரவில் கார்களுக்கு குறி வைக்கும் திருட்டுக் கும்பல்

சீர்காழியில் நள்ளிரவில் காரில் வந்து சொகுசுக்கார்களின் நான்கு சக்கரங்களையும் திருடும் கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் ஏற்கனவே இரவு நேரத்தில் சாலையில் திரியும் ஆடுகளை திருடுவது, மற்றும் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடுவது என குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக வீடுகளின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களில் உள்ள நான்கு சக்கரங்களையும் அப்படியே அலேக்காக திருடும் சம்பவங்கள் அரங்கேறி, பொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சீர்காழி, தேர் தெற்கு வீதியை சேர்ந்தவர் முத்துராமன். நகை, அடகு வியாபாரம் செய்து வருகிறார். இவர் எப்போதும் தன்னுடைய காரை வீட்டு வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு முத்துராமன் தன்னுடைய சுசூகி எர்டிகா சொகுசுக் காரை வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து வெளியே புறப்படத் தயாரானவர் காரை துடைக்க வந்துள்ளார். அப்போது கற்களை முட்டுகொடுத்து காரின் நான்கு சக்கரங்களும் திருடப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ந்து போனார். இத்தனைக்கும் இவரது வீட்டருகே சினிமா தியேட்டர் ஒன்றும் உள்ளது. இரவு ’செகண்ட் ஷோ’ சினிமா பார்த்துவிட்டு மக்கள் எல்லோரும் சென்ற பின்னரே இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவரது வீட்டு எதிரே சற்று தள்ளி உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஒரு வெள்ளை நிற கார் ஒன்று இரண்டு, மூன்று முறை அந்த வீதியின் வழியே செல்வதோடு, முத்துராமன் காரின் அருகே தங்களது காரை நிறுத்தி சக்கரங்களை திருடுவதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தென்பாதி அருகே நகர் ஒன்றில் நிறுத்தி வைத்திருந்த காரின் சக்கரங்களை திருட முயன்று அவர்கள் வீட்டு நாய் குலைத்ததால் திருடர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்களால் சீர்காழி நகரில் வீட்டு வாசலில் காரை நிறுத்திவைத்திருக்கும் பலர் பெரும் அச்சத்துடன் உள்ளனர். ’’வாசலில் காரை நிறுத்திவிட்டு நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. நகர்ப்பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு கேமரா இருப்பதால் திருட்டுக்கள் நடக்காது என்று நினைத்தோம். ஆனால் அந்த சிசிடிவி கேமராக்களில் பல வேலை செய்வதே இல்லை என்றும் சொல்லப்படுவதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மக்கள் இனி போலீசை நம்பாமல் அவரவர் பாதுகாப்பை அவரவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் போல் தெரிகிறது ’’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள் சோகத்துடன்.

இது குறித்து சீர்காழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம். “ஒரு வெள்ளை நிறக்காரில் வந்தவர்கள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த காரின் பதிவு எண் சிசிடிவி கேமராக்களில் சரியாக தெரியாத காரணத்தால் 25க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் அந்த காரை பின் தொடர்ந்ததில் அந்த கார் வைத்தீஸ்வரன்கோவில் பக்கம் சென்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கேமராக்கள் மூலம் ஆராய்ந்து வருகிறோம். இன்னும் சில தினங்களில் அந்தத் திருடர்களை பிடித்து விடுவோம். இந்த நபர்களும் சி.சி.டி.வி இல்லாத வீடுகளைக்குறி வைத்துத்தான் திருட்டில் ஈடுபட்டுகின்றனர். போலீஸ் காண்காணிப்பு கேமராக்கள் ஒன்றிரண்டு ரிப்பேராகி இருக்கும். மற்றபடி அனைத்து கேமராக்களும் நன்றாக இயங்கிவருகிறது’’ என்றார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com