திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் 230/110 கி.வோ துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதை கண்ட மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக துணை மின் நிலையத்தில் மின்சாரத்தை துண்டித்து டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டபோது தீ அதிகளவு பரவியதால் மின்வாரிய ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் மின்நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.