வேலூரில் நடைபெறும் அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி காரில் சென்றார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க பிரமுகர்கள் ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி சென்ற 10 நிமிடத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் இருந்த டிபன் கடையில் திடீரென மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்தில் இருந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் தள்ளுவண்டி மற்றும் அதன் பின்னால் அமைக்கப்பட்டு இருந்த குடிசை தீயில் எரிந்து நாசமானது.
இந்த விபத்தின்போது மளமளவென குடிசையில் தீப்பற்றி எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளிக்க பட்டாசு கொளுத்தியபோது தீப்பொறி பட்டதனால் கடையில் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.