கரூர்: மது போதையில் கார் ஓட்டிய ஆசிரியர் - சக ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்
கரூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் விஜயகுமார் (50). இன்று மதியம் பள்ளியில் தேர்வு வினாத்தாள் திருத்திக் கொண்டிருந்த நிலையில் உணவு இடைவேளையின்போது விஜயகுமார் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு காரை எடுத்துக்கொண்டு சென்று மது அருந்தியுள்ளார்.
இதன் பிறகு தனது காரை எடுத்துக் கொண்டு கரூர்-ஈரோடு சாலையில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியரும், நண்பருமான பிரகாஷ் (40) என்பவரை கூட்டிக் கொண்டு மீண்டும் காரில் கரூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
கரூர் பாலிடெக்னிக் அருகே கார் வந்தபோது நிலைதடுமாறி தறிகெட்டு ஓடியுள்ளது. போதை தலைக்கேறி இருந்ததால் உடனே காரை நிறுத்த முடியாமல் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு இருந்த ஒரு வெங்காய வேன் மீது மோதியது. அப்போதும் நிற்காமல் சென்று அடுத்தடுத்து 3 பைக்குகளின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் ஆசிரியர் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மேலும் சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மற்றும் போதையில் இருந்த ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் படுகாயமடைந்து வலியால் அலறினர்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆசிரியர் பிரகாஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.