பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் கருப்பு கவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகளை விதை நெல்லாக விவசாயிகளுக்கு வழங்கி பயிர் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் வேளாண்துறையின் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற விவசாயி தனக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதில் கரும்பு, வாழை, மக்காச்சோளம், மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர் வகைகளை தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அறிவுறுரைபடி அவைகளை விவசாயம் செய்து வந்துள்ளார்.
அதே போல் கருப்பு கவுனி நெல்லை மொரப்பூர் வேளாண் அலுவலகத்தில் 1 கிலோ 100 ரூபாய் என மூன்று கிலோ வாங்கி கடந்த ஜனவரி மாதத்தில் நாற்று விட்டு பிப்ரவரி மாதத்தில் நடவு செய்துள்ளார். இதுவரை 8 மாதங்கள் முடிந்தும் நெல் பூட்டை வராமல் மூங்கில் வளர்வது போல் வளர்ந்துள்ளது.
இதனை மொரப்பூர் வேளாண் துறை அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் நீங்கள் கொடுத்த கருப்பு கவுனி நெல் நன்கு மூங்கில் வளர்வது போல் வளர்ந்து வந்துள்ளது. ஆனால் 8 மாதம் கடந்தும் இதுவரை நெல்மணி உருவாகுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று விவசாயி கூறியுள்ளார்.
அதனால் நீங்கள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அவர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாது மொரப்பூர் வேளாண் துறை அதிகாரிகளின் தவறுதலான வழிமுறையால் கால விரயம் மற்றும் ரூ.60 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தற்பொழுது இந்த நெற்பயிரை அறுத்து கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த இழப்பினை வேளாண் துறை தனக்கு இழப்பீடாக தர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்.
- பொய்கை.கோ.கிருஷ்ணா