மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி. 25 வயதான இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கருமலை கூடல் காவல் நிலைய குற்றப் பதிவேடு பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. 28-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் புதுசாம்பள்ளி நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் மர்ம நபர்கள் ரவுடி சிபியை வெட்டி கொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி, மரியமுத்து தலைமையில் வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஆண்டு கருமலைக்கூடல் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிபி தொடர்புடையவர். அதனால் பழிக்குப் பழி வாங்க இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருமலைகூடல் இன்ஸ்பெக்டர் குமரன் பிஸியாக இருந்த நிலையில் தனிப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ‘’ரவுடி பட்டியலில் இடம்பெற்ற சிபி மீது 10-க்கும் மேலான வழிப்பறி, கொலை முயற்சி வழக்கு இருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்ன மேட்டூர்ல ராஜேஸ்ங்கிறவர் கொல்லப்பட்டாரு. அந்த கொலையில சிபி சம்மந்தப் பட்டிருந்தான். அதுல கம்பி எண்ணிட்டு ஜாமீன்ல இப்பதான் வெளியில வந்தான். அதுக்கு பழிக்குப் பழியாக இவனை கொன்னு போட்டிருக்கு எதிர்டீம். ரெண்டு பேரைப் பிடிச்சி விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். பெரிய பின்னணி எதுவுமில்லை. கேங் வார் போட்டி, பழிக்குப் பழிதான் கொலைக்கு காரணம்’’என்றார்கள்.