இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பரோட்டா பிரியர்கள் அதிகமாக இருப்பதால் பரோட்டா கடைகளும் அதிகமாக உள்ளன. 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படும் பரோட்டாவைத் தினமும் பரோட்டா பிரியர்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் உணவகம் ஒன்று 1 பரோட்டாவின் விலை 2 ரூபாய் என பரமக்குடி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மாலை 5 மணி முதல் கடையின் முன்பு பரோட்டா வாங்கி செல்ல மக்கள் கூடியுள்ளனர். நேரம் ஆக, ஆகக் கட்டுக்கடங்காத கூட்டம் கடை முன் கூடியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் ரெஸ்டாரண்ட் நிர்வாகத்திடம் கடையை அடைக்கச் சொல்லியுள்ளனர். போலீசார் கூறியதைத் தொடர்ந்து கடையை அடைத்தனர். பின்னர் கூடியிருந்த மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவத்தால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதற்கிடையில் கூட்டத்திலிருந்த போதை ஆசாமி ஒருவர் கூட்டத்தைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு 100க்கு போன் செய்வதற்குப் பதிலாக 108க்கு போன் செய்துள்ளார். அங்கு சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் வேகமாக வந்துள்ளது. இதனைப்பார்த்த பொது மக்கள் குழம்பியுள்ளனர்.
பின்னர் போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் போதை ஆசாமி ஒருவர் தவறுதலாக செல்போன் நம்பரை மாற்றிப் போட்டது தெரியவந்தது.