வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன ராஜா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகம். இவருக்கு பிரகாஷ் என்ற மகனும், விஷ்ணுபிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் விஷ்ணுபிரியா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கூலித்தொழிலாளியான பிரபுவுக்குக் குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இவருடைய குடும்பத்தில் தினந்தோறும் சண்டை சச்சரவாக இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் பிரபு மற்றும் அவருடைய மனைவி கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். தந்தையின் குடிப்பழக்கத்தால் மன உளைச்சலில் இருந்து வந்த விஷ்ணுபிரியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் விஷ்ணுபிரியா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் " என்னுடைய தந்தையின் குடிப் பழக்கத்தைத் திருத்த எனக்கு வேறு வழி தெரியாமல் இந்த முடிவு எடுத்துள்ளேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பேனோ அப்போது தான் என் ஆன்மா சாந்தியடையும். இப்படிக்கு விஷ்ணுபிரியா. போயிட்டு வரேன்". என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.