தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா கெண்டேனல்லி புதூரை சேர்ந்த வெங்கடாசலம்-மாதம்மாள் தம்பதியினரின் மகள் ரம்யா. இவர் பிறந்தது முதல் காதுகேளாமல், வாய் பேச முடியாம் இருந்துள்ளார். இதையொட்டி தருமபுரி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துள்ளார். அங்கு கடந்த 2002ம் ஆண்டு 10 வயதாக இருக்கும்போது பள்ளி சார்பில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அந்த சுற்றுலாவின் போது 10 வயது ரம்யா ரயிலில் தொலைந்து போயுள்ளார். உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்கு தேடியும் ரம்யா கிடைக்காததால் மகளை தேடும் முயற்சியை கைவிட்டனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த வாய் பேச முடியாத ஒரு பெண் மும்பையில் உள்ளார் என்று அவரது புகைப்படத்தை சென்னையில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர்.
கூடுதலாக அந்தப் பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததையும், புகைப்படம் எடுத்து அனுப்பிய சூழலில், தமிழகம் முழுவதும் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத அமைப்பினர் தங்களுக்குள் மாவட்ட வாரியாக தொடர்பு வைத்துள்ளதால் ரம்யாவின் புகைப்படத்தை மாவட்டம் முழுவதும் அனுப்பி வைத்தனர்.
அதில் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என நினைத்து அவர்களது பெற்றோரை இந்த அமைப்பினர் தொடர்பு கொண்டபோது அந்த புகைப்படத்தில் கையில் பச்சை குத்தியிருந்த இடத்தை பார்த்து உறுதி செய்தனர். உடனடியாக இந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்த ரம்யாவை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னையில் இருந்து தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன ரம்யா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் வெங்கடேஷ் பழனிச்சாமி ஆகியோர் ரம்யாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- பொய்கை .கோ. கிருஷ்ணா