கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே களிமார் பகுதியை சேர்ந்தவர் விஜி (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று விஜி தனது காதலியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுற்றிக்காட்ட சென்றுள்ளார்.
இவர்கள் மண்டைக்காடு அருகே வெட்டுக்காடு பகுதியை கடந்து வந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து அலறி கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைகள் பலனின்றி மாணவி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஜி-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவுக்காக காத்திருந்த பிளஸ் 2 மாணவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.