பேனா நினைவு சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு - மனுவில் கூறியிருப்பது என்ன?

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேனா நினைவு சின்னம்
பேனா நினைவு சின்னம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் விதமாக மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீ தொலைவில் நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த சிலை அமையும் பகுதிக்குச் செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியில் மேம்பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு கடந்த ஜூன் 20ம் தேதி சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பொதுப்பணித்துறை பெற்றது. பேனா நினைவு சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதிக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று கருணாநிதி நினைவு பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ‘பேனா சின்னம் அமைப்பதற்கு முன்பாக ஐ.என்.எஸ் அடையாறு தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். பேனா சின்னம் கட்டுமானப் பணிக்காக நிலத்தடி நீரையும் பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்’ என்பது உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கடல் வளத்தை பாதுகாக்கவும், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ‘எந்த மாதிரியான உத்தரவு பிறப்பிக்கப்படும்?’ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com