'இந்தியாவிற்கு பெருமை தேடி தருவேன்' ; தாய்லாந்திற்கு பறக்கும் தஞ்சை மாணவன் - என்ன காரணம்

இந்தியா சார்பில் யோகா போட்டியில் கலந்து கொள்ளத் தாய்லாந்து செல்லும் தஞ்சை மாணவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சித்தார்த்
சித்தார்த்

தஞ்சை மாவட்டம் பிள்ளையார் பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு சித்தார்த் (5) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சித்தார்த் அருகில் உள்ள தனியார்ப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் சித்தார்த் 2 வயதிலிருந்தே யோகா பயிற்சி, சிலம்பம், வில் அம்பு, டேக்வாண்டோ, பாக்சிங் ஆகிய தற்காப்புக் கலைகளை ஆர்வமாக விடா முயற்சியுடன் கற்று வருகிறான். மூன்று வயது இருக்கும் போதே மூன்று நோபல் உலக சாதனை செய்து சான்றிதழ் பெற்றுள்ளான். அதில் மூன்று வயதில் முட்டையின் மேல் அமர்ந்து 'அர்த்த சமகோண ஆசனத்தில் 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளான்.

அதேபோல் குங்ஃபூ வில் Non Stop Punches அதிக முறை 1 நிமிடத்தில் செய்து அசத்தியுள்ளான். தனது 4வது வயதில் ஒரு நிமிடத்தில் 26 முறை Single Hand Cart wheeler செய்து சாதனை படைத்து இதுவரை 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளான். நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவனது புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சித்தார்த் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வு பெற்றுள்ளான். இந்த தேர்வின் மூலம் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் உலகளவில் நடைபெறும் யோகா போட்டியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் சித்தார்த் இந்தியா வீரராகப் போட்டியில் பங்கேற்க உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் சித்தார்த்
குடும்பத்துடன் சித்தார்த்

இது குறித்து சித்தார்த்தின் தந்தை யோகராஜ், " சித்தார்த்க்கு 2 வயதிலிருந்தே யோகா, சிலம்பம், டேக்வாண்டோ, வில் அம்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதுவரை 30 மெடல்கள் வாங்கியுள்ளான். செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டிக்குத் தாய்லாந்துக்கு சித்தார்த் செல்கிறான். அதற்காகத் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறான். இந்த போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்குப் பெருமை தேடித் தருவான் சித்தார்த் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com