தூத்துக்குடி: நடுக்கடலில் 6 பேருடன் சிக்கிய குஜராத் படகு - போதைப் பொருள் கடத்தும் கும்பலா?

தூத்துக்குடி கடல் பகுதியில் 6 பேருடன் வந்த குஜராத்தை சேர்ந்த மர்ம படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களா? என, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு
பறிமுதல் செய்யப்பட்ட படகு

குஜராத் மாநிலத்தில் இருந்து, பல்வேறு மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

சமீபகாலமாக கடத்தல் போதைப் பொருட்கள் ஆங்காங்கே பிடிபடும்போது அவை பெரும்பாலும் குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவே போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதை முழுவதுமாக தடுக்கும் வகையில், போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னையைச் சேர்ந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சுமார் 200 கடல் மைல் தொலையில் மர்ம படகு ஒன்று தமிழக எல்லை பகுதியில் நுழைந்தது தெரியவந்தது. உடனே மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் துரிதமாக செயல்பட்டு மர்ம படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர், படகில் சோதனை நடத்தியபோது போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் விசாரணையில் குஜராத்தை சேர்ந்த படகு என்பது தெரிய வந்துள்ளது.

எனவே படகில் இருந்த 6 பேரை பிடித்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் தான் சுமார் ரூ. 200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு தொடர் விசாரணைக்காக அவர்கள் 6 பேரும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகு, தருவைகுளம் கொண்டு வரும் வழியில் தரையில் தட்டி மணலில் சிக்கியது. அதை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்த படகு எதற்காக இந்த பகுதி வழியாக வந்தது? போதைப் பொருட்கள் கடத்துவதற்காக வந்தார்களா? என்பது குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- கோபிகா ஸ்ரீ

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com