மதுரை: கரும்பு தோட்டத்தில் கொத்தடிமை வேலை - 7 மராட்டியர்கள் மீட்கப்பட்டது எப்படி?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு வெட்டும் பணிக்காக மகாராஷ்டிரா மாநிலம் பீட் மற்றும் பர்பானி மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு கொத்தடிமையாக பணியாற்ற வைப்பதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் விஷால் சுரேஷ் கஸ்பே என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவின்பேரில் உசிலம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பாசமுத்திரம் புதூர் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 3 பெண்கள், 2 ஆண்கள், 2 குழந்தைகள் என 7 பேர் தங்களுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்கி அதிகப்படியான வேலை வாங்குவதாக அளித்த புகார் அளித்ததன்பேரில் அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களை மீண்டும், மகாராஷ்டிராவுக்கு அனுப்பும் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.