விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விட்டலாபுரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சகலகலாதரன் (59) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதேப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியை தலைமை ஆசிரியர் சகலகலாதரன் தனது அறைக்கு அழைத்துச் சென்று சாக்லெட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிராம மக்களிடம் கூறி முறையிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து தலைமை ஆசிரியர் சகலகலாதரனுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து திண்டிவனம் ரோசனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களை சமாதானம் செய்து தலைமை ஆசிரியரை மீட்டனர். பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியர் சகலகலாதரனுகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியரை வெளியில் விட்டுவிட்டதாக குற்றம்சாட்டி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பொதுமக்களும், வி.சி.க-வினரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன ‘ காவல்துறை இரண்டொரு நாளில் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தார்.
ஆனாலும் அவரை இன்னமும் போலீசார் கைது செய்யவில்லை. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் முகாமிடுவதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீ நாதாவிடம் தலைமை ஆசிரியர் சகலகலாதரனை கைது செய்யுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.