‘அ.தி.மு.க ஆட்சியின் ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது’ என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த முறை அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை சார்பில் விடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக அந்த துறையை கையில் வைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஐ.பி முகவரியில் இருந்து பல்வேறு கம்பெனிகள் டெண்டருக்கு விண்ணப்பம் செய்ததாகவும், சிலர் நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே டெண்டருக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்து இருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர் கோரி உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேப் போல் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. 60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் இருந்து காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.
காவல் துறை கட்டுப்பாட்டு அறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டிக்காக்கும் காவல் துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் அ.தி.மு.க அரசு இருந்திருக்கிறது.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தையும் அ.தி.மு.க அரசு தவறாகப் பயன்படுத்தி உள்ளது. கடந்த அ.தி.மு.க அரசில் இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. காலணி வழங்கிடும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு 5.09 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கிய நிலையில் அதிலும் அ.தி.மு.க அரசு பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.