உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.
தூய்மை பணியாளர் சுடலைமாடன் சாவுக்கு காரணமான, ஆயிஷா கல்லாசி இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சுடலைமாடன். இவர் கடந்த மாதம் 17 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சுடலை மாடன் கடந்த 23 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
எனவே அவரது சாவுக்கு காரணம் உடன்குடி பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி தான் என்று புகார் சொல்லப்பட்டது. இவர் சுடலைமாடனின் சாதியின் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. ஆயிஷா கைலாசி உடன்குடி பேரூராட்சியில் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை போலீசரால் கைது செய்ய முடியவில்லை. இவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுடலைமாடனின் உறவினர்களும், தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி அவர் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 14 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
அதே நேரம் சுடலைமாடன் குடும்பத்தினர் ஆயிஷா கல்லாசிக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று கடுமையாகப் போராடி வந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.