3 பேர் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய முன்வந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், டி.என்.ஏ. பரிசோதனை செய்ய 8 பேர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில், முதலில் அம்மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. தொடர் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வழக்கின் முக்கியக் கட்டமாக வழக்கில் தொடர்புடைய நபர்கள் சிலருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவரும், புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வருபவருமான பயிற்சி காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 9 பேர் மற்றும் இறையூர், கீழமுத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 11 பேரின் டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 'டி.என்.ஏ. பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது' என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் 8 பேர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 3 பேர் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய முன்வந்துள்ளனர். இதற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை இயல் கூடத்தில், பயிற்சி காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டும் ஆஜராகினர். இதனால் இன்று ஆஜரான மூன்று நபர்களுக்கு மட்டும் டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.